Pages

Aug 26, 2013

பதிவுலகில்...

அன்புத் தோழி அதிரா தம்பதியினருக்கு 
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்! 

அதிராவின் திருமண நாள் வாழ்த்து மடலினைக் க்விலிங் கைவேலையில்... 

இக் க்விலிங் கைவேலையை இணையத்தளத்தில் கண்ட
dreame-quillingwithlove.blogspot.com இவ்வலைப் பூவில் உள்ளதைப் பார்த்துச் செய்தேன். நன்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ


ஒன்றாகி இணைந்தீர் உறவுக்கோர் உதாரணமாய்
நன்றான நல்லறம் நாம் வாழ்கின்றோமென்று
உணர்வுகளை மதித்து உரிமைக்கும் இடங்கொடுத்து
திணறும் தருணங்கள் திகட்டாமல் தானுணர்ந்து
ஆசை அகல்விளக்கில் அன்பினைச் சுடராக்கி
ஓசை கேட்டிடா உயிரதன் நெருக்கமுடன்
இல்லறப் பள்ளியிலே என்றுமே மாணவராய்ப்
பல்லறங்கள் பலவகுப்பில் பாங்குடன் பயின்றுமே
வாழ்க்கைத் துணையுடன் வளமாக வாழ்வோங்க
வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடனே!!!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

முதற் பதிவும் முத்தான சொத்தும்!...


முதற்பதிவு தந்த முழுமையான மனமகிழ்வு!
அதற்கென வலைப்பூ எனக்கமைத்தாள் என்தோழி!
எல்லோர்க்கும் இனியவள் என்றும் இளைவள்
நல்லோர் புகழும் நல்தோழி அதிராவாம்
அன்பாய் வடிவமைத்து அழகிய வலைப்பூவுக்கு
நன்றாய் ஒருபெயர் நல்கிடு நீயென்றாள்
இனிமையாய் என்தன் இதயத்தின் நாதமெனப்
பனிமலைக் குளிர்ச்சியாய்ப் பக்கமாய் இருந்திட்ட
இளமதியென் மனமதியாம் இளையநிலா என்றிட
நலமெலாம் மின்னும் நற்பெயரைச் சூடினோம்!
கவிமேல் காதலால் கூறிய வணக்கப்பாடல்
குவித்த கைவரவு காட்டிடும் கைப்பணியும்
சேர்த்தங்கே சுய அறிமுகமும் முதற்பதிவாய்க் 
கோர்த்துக் கட்டிக் கூவினேன் நட்புகளை
வந்த நட்புகள் வழங்கிய வாழ்த்தினில்
இந்த உலகமே இணைந்திட இன்புற்றேன்!
தெரிந்த நட்புகள் திரண்டு வந்தனர்!
பெரியோர் வரவும் பேருவகை தந்தது!
கொஞ்சும் அன்பும் கோலக் கருத்தும்
நெஞ்சம் நிறைந்த நேசம் நல்கின!
மறக்க முடியா மனவெழுச்சி எனக்குள்
துறக்க முடியாதே தொடரும் நட்புகளை
இறைஞ்சுகிறேன் இறைவா இன்னும் இவைதொடர!
குறையின்றி அருளும் கூடுமுறவுகள் வாழ்ந்திடவே! 


முதற் பதிவும் முத்தான சொத்துமென என் முதற்பதிவு அனுபவத்தினை உங்களுடன் பகிருவதற்கு என்னைக் கோரிய வலையுல நட்புகள்

வேதாவின் வலை - கோவைக்கவி
தேன்மதுரத் தமிழ் - கிரேஸ்
ஆகியோருக்கு என் அன்பு நன்றியைக் கூறும் அதேசமயம்

முதற் பதிவின் மகிழ்வென இதன் தொடரை
என் ஆரம்ப கால அன்புத் தோழிகளான
அதிரா, இமா,
அஞ்சு - ஏஞ்சலின்,
அம்முலு - பிரியசகி ஆகியோரைத் தொடரும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   
மிக்க நன்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

 ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

பதிவோடு பகிரும் பதிவர்


இம் முறை என் பதிவோடு பகிரும் பதிவராக நான் வலையுலகில் காலடி வைத்த ஆரம்ப காலம் தொடக்கம் என் உற்ற தோழியாக இருக்கும் வலைப்பூப் பதிவர் அதிரா அவர்களின்

என் பக்கம்

http://gokisha.blogspot.de/


எனும் வலைப்பூவினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றேன்!

அதிரா தமது வலைப்பூவில் பலவிதமான பதிவுகளை பல்சுவைக் கதம்பமாகப் பதிந்து வருகிறார்.
மனதிற்கு இனிமையும் மகிழ்வையும் நகைச்சுவயாகப் பதிவுகளில் தருவதில் அதிராவுக்கு நிகராக எவரும் இல்லை.

தான் காணுகின்ற ரசனைக்குரிய காட்சிகளை, விடயங்களைப் படமாக்கி எமக்கும் காணவென வலையில் பதிவிட்டு எல்லோரையும் மகிழ்விக்கும் திறமைசாலி.

வலையுலகில் எனக்குத் தெரிந்தவரை மனம் சலியாமல் மறுக்காமல் உதவும் உன்னதமான குண இயல்புடையவர்.

வலைப்பூவைப் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு தனது வேலைகளுக்கு மத்தியில் இதனை வடிவமைத்துத் தந்ததே அவராவார். 

என்னை வலையுலகில் உங்களில் ஒருவராக அறிமுகப்படுத்திய  இனிய தோழி அதிராவுக்கு என் இதயங் கனிந்த நன்றிகளை இத் தருணத்தில் மீண்டும் கூறுகின்றேன்.

அதிராவின் பதிவுகளை நான் கூறுவதைவிட நீங்களே பார்த்திருப்பீர்கள். பாராதவர்கள் அவர் வலைப்பூவிற்கும் சென்று பார்த்து அவரையும் ஊகுவித்து நீங்களும் மகிழலாமென இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
 
மிக்க நன்றி அன்புறவுகளே!
__()__